யாருங்க சொன்னா.. நீட் கோச்சிங் தரவில்லைன்னு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற சாரண, சாரணியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாநில சாரணர், சாரணிய இயக்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாநில முதன்மை ஆணையராக பள்ளி கல்விக் துறை ஆணையர் நந்தகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், சாரணர், சாரணிய இயக்கத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த காலத்தில் கவனிக்கப்படாமல் இருந்த துறைகளை எல்லாம், தற்போது தேடித் தேடி எடுத்து சரி செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சாரணர் இயக்கத்தில் தற்போது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதை 10 லட்சம் என்ற எண்ணிக்கை அடைவதை இலக்காக வைத்துள்ளோம்.

ஆய்வுகள் தொடரும்
சாரணர் இயக்க மாணவர்களுக்கு மாவட்ட, மாநில தேசிய அளவில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இனி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் ஆய்வு செல்லும்போது சாரணர் இயக்கம் பற்றியும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வேன். சாரணர் இயக்கத்திற்கு முதல் கட்டமாக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நடவடிக்கைகளை பார்த்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்போம் என்று தெரிவித்தார்.

நீட் பயிற்சி
தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கு போராட்டத்தில் வெற்றி பெறும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து தவறாமல் வழங்கப்படும். நடப்பாண்டில் 4 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளார்கள். அது எங்களுக்குப் போதாது.

ஏற்க முடியாது
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது. நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படுமா, பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற நிலை இருந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

மாதிரிப் பள்ளிகள்
தமிழக அரசு சார்பாக மாதிரிப் பள்ளிகள் கொண்டுவதற்கு தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளிலும், முதன்மைக் கல்லூரிகளிலும், ஐஐடி, ஐஏஎம் போன்றவற்றிலும் நமது மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்பது முக்கியக் காரணம். அதற்கான முதல் படிதான் இந்த மாதிரிப் பள்ளிகள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications