நீட் ஆதரவு கருத்துக்களும் வந்துள்ளன.. எத்தனை பேர் ஆதரவு என வெளியில் கூற முடியாது.. நீதிபதி ஏகே ராஜன்
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக 83 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறிய நீட் தேர்வு பாதிப்பு குழு தலைவர் ஏ கே ராஜன், எத்தனை பேர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதை வெளியில் கூற முடியாது என்றார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அனைத்து விதமான மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துரைக்கின்றன.

நீட் தேர்வு
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என பல திமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

நீட் பாதிப்பு குழு
கடந்த மாதம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாகப் பொதுமக்கள் ஜூன் 23ஆம் தேதி வரை கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இக்குழுவின் 3ஆவது ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

86,342 பேர்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், "நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக இதுவரை 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைவரது கருத்துக்களும் நிச்சயம் பசிரீலனை செய்யப்படும். முறையான ஆய்வுக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும், மெயில், அஞ்சல் ஆகியவை மூலம் மக்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

வெளியில் கூற முடியாது
எல்லா வகையான கருத்துக்களும் வந்துள்ளது. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர். சிலர் ஓரிரு ஆண்டுகளுக்கு நீட் வேண்டாம் என்கின்றனர். சிலர் நீட் வேண்டும் என்கிறார்கள். இது அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்து. நீட் தேர்வுக்கு எத்தனை பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை வெளியில் கூற முடியாது. அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்து, அவற்றை உள்ளடக்கி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

குழுவுக்கு எதிராக வழக்கு
எங்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரது கருத்துக்களையும் உள்ளடக்கிய அறிக்கை என்பது இது மிகப் பெரிய பணி. ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முயல்கிறோம். அதற்குள் முடியவில்லை என்றால் சிறிது காலம் கூடுதலாகத் தேவைப்படலாம். அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும்" என்றார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதால், அது குறித்து கருத்து கூற முடியாது என மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications