தர்ப்பூசணி பழம் அடர் சிவப்பாக இருக்கலாமா? சென்னையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் பேட்டி
சென்னை: கோடை காலத்தில் பொதுவாக அதிகப்படியான தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சிலர் வேண்டுமென்றே தர்ப்பூசணி பழங்களில் ஊசி மூலம் செயற்கையாக சிவப்பு நிறம் சேர்ப்பதாக வதந்திகளை பரப்புகிறார்கள்.. இதை உண்மை என்று நம்பும் மக்கள் தர்பூசணி பழங்களை சாப்பிட மறுக்கிறார்கள். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வதந்தியை மறுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார், தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் அச்சமின்றி சாப்பிடலாம் என்று கூறினார்.
கோடைக்காலங்களில் மக்கள் உடல் வெப்பத்தை குறைக்க பழங்களை வாங்கி சாப்பிடுவார்கள். தர்பூசணி, மாம்பழம், கொய்யா பழம், ஆரஞ்சு, ஆப்பிள், மதுளை, கிர்ணி பழம், செவ்வாழை பழம் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவார்கள்.. இதில் தர்பூசணி தான் அதிகமாக மக்களால் விரும்பி வாங்கப்படும் பழமாக உள்ளது.

விலை குறைவு, வெயிலுக்கு இதமாக இருக்கும் என்பதால் தர்பூசணி பழம் அதிகமாக வாங்குவார்கள். வெயில் காலத்தில் தான் தர்பூசணி அதிகமாக விளையும் என்பதால் கோடைக்காலத்திற்கு ஏற்ற உகந்த பழமாக இருக்கிறது. மாம்பழமும், தர்பூசணியும் இப்போது அதிகமாக மக்களால் வாங்கப்படுவது வழக்கம்.
ஊசி மூலம் செயற்கை நிறம்
இந்நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும், கோடையில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ள தர்ப்பூசணி பழங்களில் ஊசி மூலம் செயற்கை நிறம் சேர்க்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவியது. இதனால் தர்ப்பூசணி பழம் குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் பழத்தின் உண்மை தன்மை குறித்து சோதிக்கிறார்கள்.. வாங்கவும் தயங்குகிறார்கள்.
விவசாயிகளுக்கு பாதிப்பு
இதனால் தர்ப்பூசணி பழங்களை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தர்ப்பூசணி பழங்கள் விற்பனை குறைந்ததற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ஒரு எச்சரிக்கை தான் காரணம் என்றும் கூறப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கொடுத்த எச்சரிக்கையால் அதன்விற்பனையே அடியோடு சரிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ்
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தர்ப்பூசணி தோட்டங்களுக்கு சென்ற தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அங்குள்ள பழங்களை ஆய்வு செய்து, பழங்கள் தரமானது என்றும், பொதுமக்கள் அச்சமின்றி சாப்பிடலாம் என்றும் விளக்கம் அளித்தனர்ர.
உணவு பாதுகாப்பு அதிகாரி
தர்ப்பூசணி விவகாரம் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தர்ப்பூசணி பழம் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் குழப்பம் அடைய வேண்டாம். தர்ப்பூசணி பழங்களை அச்சமின்றி தாராளமாக சாப்பிடலாம். தமிழகத்தில் விளையும் தர்ப்பூசணி பழங்களை பாதுகாப்பு பகுதிக்குள் நாங்கள் வைத்திருக்கிறோம். தர்ப்பூசணி பழத்தில் விவசாயிகள் கலப்படம் செய்வதில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம்
ஆனால் சில இடத்தில் நடக்கக்கூடிய தவறுகளையும் நாங்கள் சுட்டிக்காட்ட தவறியதும் இல்லை. சென்னையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தர்ப்பூசணி பழத்தில் கலப்படம் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கெட்டுப்போன, அழுகிய மற்றும் எலி கடித்த தர்ப்பூசணி பழங்களை பறிமுதல் செய்திருந்தோம்.
விவசாயிகள் தவறு செய்யவில்லை
தர்ப்பூசணி பழத்தில் செயற்கை நிறம் சேர்த்ததாக யார் மீதும் நான் வழக்கு போடவே இல்லை. விவசாயிகள் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் சிலர் தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டாலே தீங்கு ஏற்படும் என்ற மாயையை இப்போது ஏற்படுத்திவிட்டார்கள். தர்ப்பூசணி பழம் மிகவும் சக்தி வாய்ந்த நல்ல பழம் ஆகும். இதனை தாராளமாக சாப்பிடலாம். மக்களின் உயிர் தொடர்புடைய பிரச்சினை என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டு வருகிறோம். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இது தவறு.
அடர் சிவப்பு நிறம்
ஆனால் தர்ப்பூசணியில் கலப்படமும் இருக்கிறது. மிகவும் அடர் சிவப்பாக இருந்தாலோ, சாப்பிடும்போது சர்க்கரை போன்று தித்திப்பாக இனித்தாலோ, உதட்டில் நிறம் ஒட்டினாலோ கண்டிப்பாக கலப்படம் செய்யப்பட்டது. அது இயற்கையான பழம் கிடையாது. இந்த விவகாரத்தில் கார்ப்பரேட் குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவதாக கூறுவது தவறு.
எலி கடித்த பழம்
எலி கடித்த பழங்களை சாப்பிட்டால் எலி காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. தர்ப்பூசணியில் ஊசி மூலம் செயற்கை நிறம் ஏற்றலாம். தர்ப்பூசணியில் கலப்படம் செய்தால் எப்படி கண்டுபிடிக்கவேண்டும்? என்று விழிப்புணர்வுக்காகவே உணவு பாதுகாப்பு துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது" இவ்வாறு உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications