லட்சக்கணக்கில் யூடியூப் வருமானம் சாத்தியமா? சென்னையில் தமிழக அரசு சான்றிதழுடன் வழங்கும் மெகா பயிற்சி
சென்னை: தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனது சொந்த வளாகத்தில், டிஜிட்டல் உலகில் தடம் பதிக்கக் காத்திருக்கும் புதிய தலைமுறையினருக்காக ஒரு அசத்தலான பயிற்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் என்னென்ன பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படும், இந்த 3 நாள் பயிற்சிக்காக எப்படி விண்ணப்பிப்பது? அதை பற்றின விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்கு தளம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய வருமானக் கொட்டும் வாழ்வாதாரமாக மாறியுள்ளது. இதனை உணர்ந்து, "சொந்த YouTube சேனலை உருவாக்குவது எப்படி" என்ற தலைப்பில் ஒரு பிரத்யேக மூன்று நாள் பயிற்சித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியானது வரும் மே மாதம் 25 ஆம் தேதி (25.05.2026) தொடங்கி மே மாதம் 27 ஆம் தேதி (27.05.2026) வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை கிண்டி அருகேயுள்ள ஈக்காட்டுத்தாங்கல் சிப்கோ தொழில்துறை எஸ்டேட்டில் அமைந்துள்ள EDII-TN வளாகத்தில் மிக விரிவான முறையில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு அசத்தலான பயிற்சித் திட்டம்
நவீன டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விளம்பர முறைகள் குறித்து ஏ டூ இசட் (A to Z) நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியின் பாடத்திட்டங்கள் மிகவும் சாதுரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோக்களை எவ்வாறு கச்சிதமாக உருவாக்குவது என்பது குறித்தும், சமூக வலைதள சந்தைப்படுத்தல் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களை ஒன்றிணைக்கும் இணைப்புகள் குறித்தும் ஆழமான பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், தங்களின் யூடியூப் சேனலுக்கான வாடிக்கையாளர் வலையமைப்பை மிக வேகமாக அதிகரிக்கும் ரகசிய முறைகள், திறமையான மார்க்கெட்டிங் மற்றும் நவீன விளம்பர நுட்பங்கள், ஆன்லைன் மார்க்கெட்டிங் வழிமுறைகள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும். இதுமட்டுமன்றி, டிஜிட்டல் உலகின் அடித்தளமான டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் தொடர்பான மிக முக்கியமான அறிமுகமும், இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் அதற்கான விதிமுறைகளும் இந்த குறுகிய கால பயிற்சியில் எதையும் விடுபடாமல் முழுமையாக கற்றுத்தரப்பட உள்ளது.
3 நாள் மெகா பயிற்சி முகாம்
சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் புதிய தொழில் முனைவோர், எதிர்காலத்தை டிஜிட்டல் மயமாக மாற்ற நினைக்கும் மாணவர்கள் மற்றும் தங்களின் திறமையை உலகிற்கு காட்டத் துடிக்கும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) ஆகிய அனைவருக்கும் இந்த பயிற்சி ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ள ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் இணைவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு மிகக் குறைந்தபட்ச கணினி அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும், அதேபோல் பத்தாம் வகுப்பு (10th Standard) தேர்ச்சி பெற்ற எவரும் இந்த பயிற்சியில் தாராளமாகப் பங்கேற்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.
வெளிமாநில பயிற்சியாளர்கள்
சென்னையைத் தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கிப் படிக்க விரும்பும் பயிற்சியாளர்களின் வசதிக்காக, மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியும் இந்த வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதி தேவைப்படுபவர்கள் தங்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
இந்த பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களை முழுமையாக அறிய விரும்புவோர் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அலுவலக வேலை நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசலாம். இந்த பயிற்சிக்கான இடங்கள் மிகக் குறைவு என்பதால் முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தமிழக அரசின் மதிப்புமிக்க அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், எண் 1, EDI இன்ஸ்டிடியூட் சாலை, SIDCO தொழில்துறை எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600032.
தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 9360221280 மற்றும் 8668100181. டிஜிட்டல் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications