"ஆன்லைன் ரம்மி, போக்கர் திறமைக்கான விளையாட்டு" தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நவ. 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.

கடந்த ஆண்டு தீர்ப்பு
ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி தடை செய்ததை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது.

போக்கருக்கு விலக்கு
தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை வெளியிட்டுள்ளது. போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள். இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள். 1957ம் ஆண்டில் மேற்கு வங்க சூதாட்டம் மற்றும் பரிசுப் போட்டிகள் சட்டம் 'கேமிங் அல்லது சூதாட்டம்' என்ற வரையறையிலிருந்து போக்கரை விலக்கியுள்ளது.

திறமைக்கான விளையாட்டு
அதேபோல் 2009ல் சிக்கிம் அரசு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள் போக்கர் மற்றும் ரம்மியை உரிமத்தின் கீழ் விளையாட அனுமதிக்கின்றன. நாகாலாந்து அரசு போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதப்படுகிறது.

நவ.16ல் விசாரணை
அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளது. எனவே மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள தமிழக அரசின் ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி அமர்வு, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications