கத்தை கத்தையாக பணம்.. அள்ள அள்ள வந்த தங்க நகைகள்.. 35 கோடி.. அமலாக்கத்துறையே ஆடிப்போச்சு
டெல்லி: அரியானாவைச் சேர்ந்த இந்தர்ஜித் சிங் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கடந்த சில நாட்களாக அதிரடி சோதனைகளை நடத்தி வந்தது. டெல்லி மற்றும் அரியானாவில் நடத்தப்பட்ட சோதனைகளில் தங்கம், பணம், கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளது. டெல்லி சர்வாப்பிரியா விஹார் பகுதியில் உள்ள இந்தர்ஜித்தின் கூட்டாளி அமன் குமார் என்பவரது வீட்டில் மட்டும் சுமார் ரூ.5.12 கோடி கைப்பற்றப்பட்டது. சுமார் ₹8.80 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் ஒரு சூட்கேஸில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.
அரியானாவை சேர்ந்த இந்தர்ஜித் சிங் யாதவ் ஜெம் டியூன்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையே கடன் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி இணையதளம் ஒன்றை துவக்கினாராம். அதன் மூலம் சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்தல், கடன் வாங்கிய தனி நபர்களை மிரட்டுதல், ஆயுதங்களை கொண்டு மிரட்டுதல் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து பணம் பறித்தல், தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து மிரட்டி கடன் பெறுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்தர்ஜித் சிங் யாதவ் மீது வழக்குகள் போடப்பட்டது. அரியானா மற்றும் உத்தரபிரதேச போலீசாரால் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கை கையில் எடுத்துள்ளது.
தற்போது இந்தர்ஜித் சிங், ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக இருந்தபடி செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவரது கூட்டாளி அமன்குமார் மற்றும் இந்தர்ஜித் சிங் ஆகியோரது வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டார்கள்.
நேற்று வரை நடந்த சோதனையில் ரூ.5.12 கோடி ரொக்க பணம், ரூ.8.80 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் நிறைந்த ஒரு சூட்கேஸ் மற்றும் வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் ரூ.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒரு பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications