"ஒரே பாஜக.. ஒரே காவிரி.. 9 நிலைப்பாடு" - கர்நாடகா,தமிழ்நாட்டில் பாஜக அரங்கேற்றுகிற அதிரடி கூத்துகள்!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் வரும் 16-ந் தேதி தமிழ்நாடு பாஜகவும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளை கண்டித்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு பாஜக.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட முதன் முதலில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெளிநடப்பும் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாடு தரப்பில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட கோரியது. தமிழ்நாடு கோரிய நீர் அளவை விட மிக மிக சொற்பமானது 5,000 கன அடிநீர் திறப்பு உத்தரவு.

தூண்டிவிட்ட கர்நாடகா பாஜக: இதனை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு திறந்துவிடுவதாகவும் சொன்னது. அப்போது மண்டியா உட்பட எங்கும் கர்நாடகா விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டம் தொடங்கவில்லை. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது; தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைத் திறக்கவும் விடமாட்டோம் என முதன் முதலாக மண்டியாவில் போய் போராட்டம் நடத்தியது கர்நாடகா மாநில பாஜக. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அத்தனைக்கும் காரணமே பாஜக: அன்று மண்டியாவில் பாஜக தொடங்கி வைத்த போராட்டம் இன்று 35வது நாளாகவும் நீடிக்கிறது. அன்று பாஜக தமிழ்நாட்டுக்கு எதிராக தொடங்கி வைத்த போராட்டம்தான் மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் தொடங்கி இன்றைய வாட்டாள் நாகராஜ் எல்லை பந்த் போராட்டம் வரை தொடருகிறது. தற்போது கர்நாடகா பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கை கோர்த்து நிற்கிறது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க தயாராக இருந்த கர்நாடகா காங்கிரஸ் அரசை போராட்டங்கள் மூலம் மிரட்டியது அம்மாநில பாஜக.

கர்நாடகா காங்கிரஸ் அரசு: ஆனால் தமிழ்நாடு பாஜகவோ, காவிரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸ் அரசும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும்தான் காரணம் என இடைவிடாமல் குற்றம்சாட்டி வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசுகிறார். இப்போது வரும் 16-ந் தேதி கும்பகோணத்தில் தமிழ்நாடு பாஜக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது. இந்தப் போராட்டம் கர்நாடகா, தமிழ்நாடு அரசுகளுக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பாஜக ஒரே காவிரி 9 நிலைப்பாடு: காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் போதுமான நீர்வரத்து இருந்தும் இதுநாள் வரை திறக்கவிடாமல் தடுத்தது கர்நாடகா மாநில பாஜக. இப்போது காவிரியில் திடுதிப்பென கூடுதல் நீரை கர்நாடகா காங்கிரஸ் அரசு திறந்துவிட்டிருக்கிறது. இதனை எதிர்ப்பதும் கர்நாடகா பாஜக. ஆனால் தமிழ்நாடு பாஜகவோ, நீரை திறந்துவிடக் கூடாது என போராட்டத் தீயை பற்ற வைத்த கர்நாடகா பாஜகவை எப்படி கண்டிக்கும்? ஒரே பாஜக.. ஒரே காவிரி.. ஒன்பது நிலைப்பாடு என்பது அப்பட்டமாக பாஜகவுக்குதான் பொருந்தும் என்பது சீனியர் பத்திரிகையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications