இது 22 மாவட்ட பிரச்சனை! கர்நாடகா முதல்வரை போய் பாருங்களேன்! ஸ்டாலினுக்கு ‛அட்வைஸ்’ சொன்ன அன்புமணி
சென்னை: தமிழ்நாட்டில் காவிரி விஷயம் என்பது 22 மாவட்டங்களுக்கான பிரச்சனை. இதனால் அதிகார பேச்சுவார்த்தையை கைவிட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தண்ணீர் திறந்து விட கோர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. இந்த ஆண்டும் தற்போது பிரச்சனை என்பது உருவாகி உள்ளது. கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யவில்லை எனக்கூறி அம்மாநில அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி வாடும் நிலைக்கு செல்ல உள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் பிடிவாதம் செய்து வருகிறது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது. இந்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி பிரச்சனை பற்றியும், கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெறுவது குறித்தும் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதாவது இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களில் 2 முறை அனைத்து கட்சி கூட்டம் என்பது கூட்டப்பட்டுள்ளது. அங்கு அனைத்து கட்சிகளும் ஒரே மனநிலையில் உள்ளது. இங்கு நானா, நீயா என குறை சொல்லி இருக்கிறோம். உண்மையில் இது குறை சொல்லும் நேரம் இல்லை. தமிழக முதல்வர், கர்நாடகா முதல்வரை சந்திக்க வேண்டும். இந்த சந்திப்பின் மூலம் ஏதாவது ஒரு நல்லது நடக்க போகிறது. கூட்டணி பற்றி நான் எதுவும் கூறவில்லை.
ஒரு முதல்வராக இன்னொரு முதல்வரை போய் பாருங்கள். எங்கள் விவசாயிகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்து கூறுங்கள். காவிரி பிரச்சனை என்பது விவசாயிகள் பிரச்சனை மட்டும் கிடையாது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் சென்னை உள்பட 22 மாவட்டங்கள் காவிரியை நம்பி தான் உள்ளது. விவசாயம், குடிநீர், வாழ்வாதாரத்துக்கு காவிரியை தான் நம்பி உள்ளனர்.
இதனால் இந்த விஷயத்தில் விவசாய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, வாழ்வாதார பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளும் உள்ளன. இதை அந்த வகையில் கர்நாடகா பார்க்க வேண்டும். இவ்வளவு காலம் நாம் சகோதரத்தன்மையுடன் தான் வாழ்ந்து வருகிறோம். இன்னும் 5 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவிரி விஷயத்தை பொறுத்தமட்டில் அதிகாரம் சார்ந்த பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட ஒரு முதல்வர் இன்னொரு முதல்வரை சந்தித்து தண்ணீர் கொடுக்க கூறினால் அவர்கள் மனம் இறங்கி வந்து தண்ணீர் கொடுக்க வாய்ப்புள்ளது. அதை தான் நான் கூறுகிறேன்.
தற்போது நல்ல உறவை வைத்துள்ளார்கள். இருகட்சிகளும் ஒரே கூட்டணியில் தான் இருக்கிறீர்கள். அந்த காரணத்தை வைத்து தான் நான் கூறுகிறேன். அதிகாரப்பூர்வ பேச்சு வேண்டாம் எனவும் நாங்கள் கூறியுள்ளோம். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் காவிரியில் தண்ணீர் கிடைக்காவிட்டால் ஏற்கனவே கருகி வரும் 2 ஏக்கர் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டு விடும்'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அனைத்து கட்சியின் நாடாளுமன்ற எம்பிக்களும் மத்திய ஜல்சக்தி அமைச்சரை தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் சேர்ந்து சந்திக்க இருப்பதாக திமுகவின் திருச்சி சிவா எம்பி கூறியுள்ளார்'' என்ற கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் செல்வோம். நிச்சயமாக அதனை செய்ய வேண்டும்'' என்றார்.

மேலும், ‛‛எந்ததந்த வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அந்தந்த வழிகளில் உறுதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். நீதிமன்றங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அமைச்சர்களை பார்ப்பது, நடுவர் மன்றத்தை நாடுவது, காவிரி மேலாண்மை ஆணையத்தை பார்ப்பது உள்ளிட்ட அழுத்தம் கொடுக்கும் செயல்களை செய்ய வேண்டும்.
ஆனால் அழுத்தம் கொடுத்தாலும் வெளிப்படையாக நாங்கள் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறுவது என்பது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஏனென்றால் அடுத்தக்கட்டமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகும். எல்லையில் தற்போது கர்நாடகாவினர் போராட்டம் நடத்துகின்றனர். அதேபோல் இங்கு போராட்டம் நடத்தினால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் வேறு விதமான பிரச்சனையாக மாறிவிடும்.'' என்றார்.












Click it and Unblock the Notifications