ரிப்போர்ட் ரெடி: ஈபிஎஸ் பக்கம் 2.. ஓபிஎஸ் டீமில் ஒருவர்.. வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி- நாளை தாக்கல்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் நாளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்திற்கே சென்ற விசாரணைக் குழுவினர் சேதங்கள் குறித்து பார்வையிட்டனர்.
மேலும், ஈபிஎஸ் ஆதரவாளர்களான சி.வி.சண்முகம், மேனேஜர் மகாலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில், அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெறும் நிலையில், விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் நாளை தாக்கல் செய்ய உள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலக மோதல்
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்பால் சென்னை வானகரத்தில் நடத்தப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் தலைமைக் கழகமே ரத்தக்களறியானது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.

ஆவணங்கள் கொள்ளை
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஈபிஎஸ் ஆதரவாளர் ஆதிராஜாராம், ஓபிஎஸ் ஆதரவாளர் பாபு உள்ளிட்டோரும் வன்முறை தொடர்பாக புகார் அளித்தனர். இதனையடுத்து, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4 வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி போலீசார், இந்த மோதல் தொடர்பாக அதிமுக அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பான தடயங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். இதனை தொடர்ந்து தலைமை கழக மேனேஜர் மகாலிங்கத்தை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சிவி சண்முகம் - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் போலீசார் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். ஓ.பி.எஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அறிக்கை தயார்
அதிமுக அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சிபிசிஐடி போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications