ரூ. 4 கோடி மேட்டர்.. பாஜக நிர்வாகி வீட்டுக்கே போன சிபிசிஐடி.. உடல்நலக் குறைவால் திரும்பி வந்தனர்!
சென்னை: ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகியிடம் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேர் சிக்கினர்.

பிடிபட்டவர்கள் பாஜக எம்.எல்.ஏ-வும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக புரசைவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கில் தாம்பரம் போலீசார் ஏற்கனவே 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்தனர். அந்த 350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது சிபிசிஐடி.
நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் தொழில் துறை பிரிவு மாநில துணைத் தலைவர் கோவர்த்தனன் சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பாஜக மாநில நிர்வாகி கோவர்த்தனனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து இந்த 4 கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, பாஜகவின் தொழில் துறை பிரிவு மாநில துணைத் தலைவர் கோவர்த்தனனின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்று சிபிசிஐடி போலீசார் அவரைச் சந்தித்தனர். கோவர்த்தனனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓரிரு நாட்கள் கழித்து நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications