Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல், ரஜினி எடுத்த திடீர் முடிவு? ஒரே இரவில் வந்த ஐடியா! ‘கல்யாணராமன்’ 45 வருட நினைவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் 'கல்யாணராமன்' திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விசயங்களைப் பலரும் அசைபோடத் தொடங்கி உள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த 'கல்யாணராமன்' திரைப்படம் வெளியாக 45 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. 1979 ஜூலை மாதம் 6 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்து, வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின்னர் 1982இல் இந்தியில் 'கசாப்' என்றும் 1992இல் கன்னடத்தில் ஸ்ரீராமச்சந்திரா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. படம் வெற்றியடைந்ததை அடுத்து மீண்டும் 1985இல் 'ஜப்பானில் கல்யாணராமன்' என இதன் இரண்டாம் பாகம் வெளியானது.

Kamal Haasan Rajinikanth

இந்தப் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்ததால், அவரது வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தயாரிக்கும் வரையில் தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் இணைந்து படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த பஞ்சு அருணாசலம், பி.ஏ.ஆர்ட் என்ற பெயரில் ஒரு தனி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பஞ்சு அருணாசலம், கவியரசர் கண்ணதாசன் உதவியாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தவர். ஆகவே, அவருக்கு அந்தக் காலத்தில் திரைத்துறையில் நல்ல மரியாதை இருந்தது. குறிப்பாக இவரைப் பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், இன்றைக்குப் பட்டி தொட்டி முதல் பணக்காரர்கள் வீடு வரை திருமண நிகழ்ச்சி என்றால், 'மணமகளே மருமகளே' பாடல் ஒலிக்காமல் இருக்காது. அதை எழுதியவர் பஞ்சு அருணாசலம் தான். பலருக்கும் இந்தப் பாடலை இவர் எழுதியது என்பது தெரியாது.

பாடல், திரைக்கதை, தயாரிப்பு எனப் பல வழிகளில் தனி முத்திரைப் பதித்த பஞ்சு அருணாசலம் கமல்ஹாசனையும் ரஜினியையும் வைத்து ஒரு படத்தை இயக்குவதற்காக ஒரு கதை எழுதி கால்ஷீட் கேட்டார். அப்போது 'நினைத்தாலே இனிக்கும்' என்ற படத்தில் இந்த இருவரும் இணைந்து நடித்துவந்தனர். தனித்தனி மார்கெட் இருவருக்கு உருவாகி வருவதை உணர்ந்த கமல், 'இனிமேல் நான் இணைந்து நடிக்க வேண்டாம். இதுவே கடைசி படமாக இருக்கட்டும். உங்களுக்கும் நல்ல மார்கெட் உள்ளது. தனியாக நடியுங்கள்' என ரஜினிக்கு அட்வைஸ் சொன்னார். அதுவரை ரஜினிக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை. கமல் எடுத்துக் கொடுத்ததும் அதை உடனே கபக் என்று பிடித்துக் கொண்டார் ரஜினி.

அந்த நேரத்தில் தான் எஸ்.பி.முத்துராமன் மூலம் பஞ்சு கால்ஷீட் வாங்க முயன்றார். போய் பேசிய போது இருவரும் எடுத்த முடிவைச் சொன்னார்கள். பஞ்சு அருணாசலத்திற்கு இந்த விசயம் லேசாகப் பின்னடைவைத் தந்தது. அவர் தொழில்ரீதியாகப் புத்திசாலி. உடனே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு எடுத்தார்.

Kamal Haasan Rajinikanth

கமல்ஹாசனை வைத்து 'கல்யாணராமன்' எடுக்கவும், ரஜினியை வைத்து 'ஆறிலிருந்து அறுபதுவரை' எடுக்கவும் திட்டமிட்டு இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்தார். இந்தப் பக்கம் ரஜினியைவைத்து ஒரு படம், அந்தப் பக்கம் கமலை வைத்து ஒரு படம் என ஒரே சமயத்தில் பஞ்சு இரட்டை குதிரையில் சவாரி செய்தார்.

ரஜினியை வைத்து 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தை எஸ்.பி. முத்துராமனை இயக்கவைத்த பஞ்சு, கமல் படத்தை யாரை வைத்து இயக்குவது என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது முத்துராமனிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வந்த ஜி.என். நாகராஜனை அழைத்து இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்தார். இவருக்கு கமல் நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படத்திலிருந்தே கமலுடன் அறிமுகம் இருந்ததால் இயக்கும் வேலைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்விட்டது.

'கல்யாணராமன்' படத்திற்கான மூலக்கதை Dona Flor and Her Two Husbands என்ற படத்திலிருந்து தழுவலாகப் பெறப்பட்டது. இந்தப் படத்தில் நாயகியின் கணவன் இறந்துவிடுவான். ஆகவே அவர் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார். ஆனால், இரவு படுக்கை அறையில் 2வது கணவனுடன் இருக்கும் போது முதல் கணவன் பூதமாகத் தோன்றுவான். அது நாயகியின் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

அதை அப்படியே தமிழுக்குத் தக்க மாதிரி பஞ்சு அருணாசலம் மாற்றி எழுதினார். அதேபோல் 1948இல் வெளியான 'இது நிஜமா' படத்தின் பாதிப்பு 'கல்யாணராமனி'ல் இருந்தது எனச் சிலர் எழுதியுள்ளனர். 'இது நிஜமா?' படத்தின் கதையை எழுதியவர் எஸ்.பாலசந்தர். இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய ஜாம்பவனாக அறியப்பட்டவர். 1934 லேயே வெளியான 'சீதா கல்யாணத்தில்' நடிக்கும் அளவுக்கு அழகாக இருந்தவர். பின்னால் இயக்குநராக அவதாரம் எடுத்து 1970கள் வரை பல படங்களை தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கியவர்.

Kamal Haasan Rajinikanth

ஆக, 'கல்யாணராமன்' படத்திற்கான மூலக் கதை இந்த இரண்டு படங்களிலிருந்தும் பெறப்பட்டது. அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்த வெற்றி மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனதால், மீண்டும் இதே கதையின் தொடர்ச்சியாக 'ஜப்பானில் கல்யாணராமன்' என்ற படத்தைப் பஞ்சு எடுத்தார்.

முதல் பாகத்தை இயக்கும் வாய்ப்பு ரஜினியின் 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தால் தவறியது. ஆகவே முத்துராமனின் அசோசியேட் இயக்கினார். இரண்டாம் பாகத்தை எஸ்.பி. முத்துராமனே இயக்கினார். தமிழ் சினிமாவில் ஒரு படத்தை முன்வைத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட முதல் 'கல்யாணராமன்' தான் என்றும் சொல்கிறார்கள்.

முதல் பாகம் வாய்ப்பு முத்துராமனுக்கு தவறியதில் தப்பு ஒன்றும் இல்லை. ரஜினியை வைத்து இவர் இயக்கிய 'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தை இயக்கியதற்காக அந்த ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருதை இவர் பெற்றார். அதேபோல சிறந்த நடிகருக்கான விருதை ரஜினி பெற்றார். 'கல்யாணராமன்' மற்றும் 'ஜப்பானில் கல்யாணராமன்' ஆகிய இரண்டு படங்களை இரண்டு இயக்குநர்கள் இயக்கி இருக்கலாம்.

ஆனால், பஞ்சு அருணாசலம் அறிமுகம் செய்த இசையமைப்பாளர் என்ற அளவில் இவை இரண்டுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார். இசை ரீதியாகவும் இந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+