“ஜனநாயகன்” ரிலீஸுக்கு தடை! ஜன.21க்கு ஒத்திவைப்பு! சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு
சென்னை: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷாவின் தீர்ப்புக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, ஜனநாயகன் பட வழக்கில் தனி நீதிபதி ஆஷா உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது தலைமை நீதிபதி அமர்வு.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு முடிவு செய்திருந்தது. ஆனால் இப்படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளித்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்சார் போர்டு சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பெஞ்ச் முன்பாக ஆஜராகி முறையிட்டார். நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, விசாரிப்பதாகத் தெரிவித்தார். ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்துள்ளது. மேலும், சென்சார் போர்டு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து, “சென்சார் போர்டு பதில் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?" என மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், “தணிக்கைச் சான்றிதழ் கூட பெறாமல், நீங்கள் எப்படி திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை செய்வீர்கள்? இதை இறுதி செய்யாமல் நீங்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்துவிட்டு, நீதிமன்றத்தின் மேல் அழுத்தம் கொடுக்கக்கூடாது" என தயாரிப்பு நிறுவனம் தரப்பையும் கண்டித்தார்.
மேலும், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு தனி நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு. இதனால், ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications