அசராத பாஜக.. 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக இன்று உண்ணாவிரதம்.. பரபரக்கும் சென்னை
சென்னை: பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், 3 கிரிமினல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும், அவைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
போராட்டம்: இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த புதிய கிரிமினல் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும், இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட நீதிமன்றங்களில் வாயில் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுக கண்டனம்: சென்னையில் ஹைகோர்ட் அருகே நடந்த ஆர்பாட்டத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேசும்போது, "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், 3 சட்டங்களை இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரானவையாக உள்ளது.
எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதைவலியுறுத்தி நாளை (இன்று சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று அறிவித்திருந்தார்.
புறக்கணிப்பு: இதனிடையே, இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.. இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக் கோரி வருகிற 8-ந்தேதி ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென்று முடிவு செய்யப்பட்டது.
3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என்று ஜி.மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு: மத்திய அரசின் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிரான கண்டனங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்று வரும்நிலையில், இன்றைய தினம் திமுக சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த போராட்டத்துக்கு கட்சியின் சட்டத் துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், தி மு க சட்டத்துறைத் தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தலைவர்கள்: 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக நடத்தும் இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கிவைக்கிறார். தி மு க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நிறைவுரை ஆற்றுகிறார். சட்டத்துறை துணைச் செயலாளர்கள் ஜே.பச்சையப்பன், கே.சந்துரு ஆகியோர் நன்றியுரை ஆற்றுகிறார்.












Click it and Unblock the Notifications