மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு
சென்னை : இந்திய மொழிகளை ஊக்குவிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் 'மும்மொழித் திட்டம்', தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் ஒரு வழியாகவே அமையும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், இந்தி பேசும் மாநிலங்களில் பிற இந்திய மொழிகளைக் கற்க எந்தவிதமான பரஸ்பர உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என்று தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய சிபிஎஸ்இ பாடத்திட்ட வரைவு மற்றும் 3 வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து திமுக நிர்வாகியும், தென் சென்னை தொகுதி எம்பியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறுகையில், "தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சிபிஎஸ்இ பாடத்திட்ட வரைவு, மொழியியல் சமநிலை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கடும் கவலைகளை எழுப்புகிறது.

இந்திய மொழிகளை ஊக்குவிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் 'மும்மொழித் திட்டம்', தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் ஒரு வழியாகவே அமையும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், இந்தி பேசும் மாநிலங்களில் பிற இந்திய மொழிகளைக் கற்பதற்கான எவ்வித பரஸ்பர உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இத்தகைய ஒருதலைப்பட்சமான அணுகுமுறை சமத்துவ உணர்வையே சிதைக்கிறது.
இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகள் குறித்தும் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தகுதியான ஆசிரியர்கள் எங்கே? உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு எங்கே? மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயாக்களில் கூட தமிழ் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த முரண்பாட்டை எவராலும் புறக்கணிக்க முடியாது.
மொழிக்கொள்கை என்பது திணிப்பின் அடிப்படையில் அமையாமல், சமத்துவம் மற்றும் தனிமனித விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமமற்ற நிலையை உருவாக்கும்; இது கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் லட்சியப் பாதையில், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், திராவிட மாடல் அரசு எந்த வடிவத்திலும் வரும் மொழித் திணிப்பைத் தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும். இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது. அந்தப் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் மும்மொழி கொள்ளை குறித்து கூறுகையில், "தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.
"இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்" என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. "மும்மொழிக் கொள்கை" என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்.
தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத - தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்!
ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது.
இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் - விஷுவல் எஃபக்ட்ஸ் - கேமிங் - காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான - ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.
இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா?" இவ்வாறு கூறினார்.
-
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications