'இது மத்திய அரசின் கருணை பணம் அல்ல.. மக்களின் பணம்..' சட்ட சபையில் பாடம் எடுத்த அமைச்சர் பிடிஆர்
சென்னை: மத்திய அரசுக்கும், ஏழ்மை மாநிலங்களுக்கும் தமிழ்நாடு net donarஆக உள்ளதாகச் சட்டசபையில் தெரிவித்த நிதியமைச்சர் பிடிஆர், மத்திய அரசு கருணை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியளிப்பதில்லை என்றும் மக்களுடைய பணத்தை மாநிலங்களிடம் இருந்து எடுத்து, அதையேதான் மாநிலங்களுக்கு திரும்ப அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு முதல்முறையாகக் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

வானதி சீனிவாசன் பேச்சு
இந்நிலையில் சட்டசபையில் பேசிய கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "ஆண்டாள் பெயரில் பெண் கவிஞர்களுக்கு விருது வழங்கத் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரதமரைத் திரும்பிப் போ என்று சொன்னாலும்கூட, பாதுகாப்பு தொழில் வழித்தடம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது" என்று கூறினார்.

அமைச்சர் பிடிஆர் பதில்
அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "உறுப்பினர் பேசும்போது இங்கே ஏதோ, மத்திய அரசு கருணை அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதைப் போலக் கூறுகிறார். நிதிக்குழு கூறிய ஒன்றை நான் இங்குப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வளர்ச்சியடைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஈட்டி தரும் வருவாயில் குறைவான சதவிகிதமாக இந்த மாநிலங்களுக்குத் திரும்ப அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு - உத்தரப் பிரதேசம்
மத்திய அரசுக்கும், ஏழ்மையான நிலையில் உள்ள மாநிலங்களுக்கும் நாம் தான் நிதியைத் தரும் net donarஆக உள்ளோம். எனவே, கருணை அடிப்படையில் மத்திய அரசு நிதியைத் தரவில்லை. இது மக்கள் பணம். இந்தியாவின் ஜிடிபி-இல் தமிழ்நாட்டின் பங்கு 9.16%ஆக உள்ளது. ஆனால் நமக்கு 4.07% மட்டுமே நிதி கிடைக்கிறது. உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜிடிபி 9.04%ஆக உள்ளது. ஆனால், அவர்களுக்கு 17.93% நிதி தரப்படுகிறது.
|
மக்களுடைய பணம்
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது முன் வைத்த வாதத்தைப் பின்பற்றி, நானும் இப்போது திரும்பக் கேட்கிறேன். இது யாருடைய பணம். மக்களுடைய பணம், மாநிலங்களிடம் இருந்து எடுக்கப்பட்டு மாநிலங்களுக்கே திரும்ப அளிக்கப்படுகிறது. அதுவும் கூட தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஒரு ரூபாயில் 35, 40 பைசாவைத்தான் திரும்பத் தருகிறார்கள். கருணை அடிப்படையில் நிதியைத் தரவில்லை" என்றார்.

பகிர்ந்து அளிக்கத் தேவையில்லாத நிதி
அப்போது பேசிய வானதி சீனிவாசன், "14ஆவது நிதிக்குழு முடிவின் அடிப்படையில் மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பங்கீடு என்ற முடிவால் சில மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர், "காங்கிரஸ் அரசு அமைத்த 14ஆவது நிதிக்குழு குழு பரிந்துரை இது. இதை பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், மாநிலங்களுக்குப் பகிர்ந்து தரத் தேவையில்லாத செஸ் மற்றும் சர்சார்ஜ் அப்போது வரை 9- 10% ஆக இருந்தது. ஆனால், அது இப்போது 23% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கக் கூடிய பணம் மாறவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications