Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி காலத்தை மாற்றச் சொன்னார்கள்.. அப்படி மாற்ற முடியாது.. திட்டவட்டமாக சொன்ன அமர்நாத் ராமகிருஷ்ணா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையில் காலத்தை மாற்ற மத்திய அரசு கூறியதாக தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். காலத்தை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், அகழாய்வு குழிகள்தான் காலத்தை நிர்ணயித்தது என்றும் விளக்கம் கூறியுள்ளார்.

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்திருப்பது தமிழ்நாட்டில் தொடர் பேசுபொருளாக இருந்து வருகிறது. கீழடி அறிக்கையில் மாற்றம் செய்யக் கோரி மத்திய அரசு அனுப்பி இருந்த நிலையில், தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கீழடி அறிக்கை விவகாரத்தைத் தமிழக எம்பி-க்கள் கையில் எடுக்க உள்ளனர்.

Centre Asked to Alter Keezhadi Excavation Timeline Says ASI Director Amarnath Ramakrishna

இந்த நிலையில் தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில், கீழடியின் காலத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். காலத்தை மாற்ற முடியாது. ஏனென்றால் காலம் என்பது நான் நிர்ணயித்தது கிடையாது. கீழடியின் அகழாய்வு குழிகள் தான் காலத்தை நிர்ணயிக்கிறது. அகழாய்வு குழிகள் எடுத்துச் சொல்லுகிற அனைத்து காரணிகளையும் வைத்தே காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அந்த காலத்தை மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் ஒரு அகழாய்வு செய்ய வேண்டும். நாட்டின் எந்த பகுதியிலும் பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அதனைப்பற்றி கவலை கிடையாது. அகழாய்வு என்பது தொல்லியல் ஆய்வாளரின் முக்கியமான கடமை. அதனைச் செய்யும் போது மட்டுமே வரலாறுகள் வெளியில் வரும். அகழாய்வு அறிக்கையில் பிழைத் திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும். ஏனென்றால் அகழாய்வின் அடிப்படையில் அறிக்கையில், அங்குக் கிடைத்த தரவுகளை மட்டுமே கொடுத்திருப்போம்.

வேறு எதுவும் அறிக்கையில் கொடுக்கப்பட மாட்டாது. அதில் எங்களின் தனிப்பட்ட கருத்துகள் இருக்காது. என்னென்ன கிடைத்தன, அதனை வைத்து எவ்வாறு காலத்தை வகுக்கின்றன என்பதையே சொல்லும். இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை, எண்கள் விட்டுப் போயிருக்கலாம், புகைப்படம் தவறவிடப்பட்டிருக்கும். ஆனால் காலங்களை மாற்ற முடியாது. கீழடி அறிக்கையில் காலத்தை மாற்ற முயற்சிகள் நடக்கிறதா என்பது தெரியவில்லை.

மத்திய அமைச்சர் கஜேந்திர ஷேகாவத் கருத்து தொடர்பாகப் பேச முடியாது. என்னுடைய அறிக்கை முழுமையாக ஒரு தகவலைக் கூறி இருக்கிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நெறிமுறைகளின்படி குழிகள் தோண்டப்பட்டது. மொத்தமாக 102 குழிகள் தோண்டப்பட்டன. அனைத்து குழிகளின் விவரங்களும், கிடைத்த பொருட்களும், கலாச்சார பண்பாட்டுக் கூறுகளும், தொல்பொருட்கள், கார்பன் டேட் உள்ளிட்டவற்றை இணைத்து காலக்கணிப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள். அதற்கு மேல் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. கீழடி ஆய்வறிக்கை இந்தியாவின் ஒரு கலாச்சாரம், சிந்துசமவெளி நாகரிகம், வேத நாகரிகம், குப்தர்கள் என்றுதான் வரலாற்றைப் படித்து கொண்டிருக்கிறோம். சங்க காலத்தைப் பற்றி அறிவதற்கான ஒரு செயல். 300 பிசி முதல் 300 ஏடி வரை காலம் கொடுத்திருக்கும். இலக்கியம் அடிப்படையில் அந்த காலத்தையும் கொடுத்துள்ளோம்.

இலக்கியம் சொல்லும் ஆதாரத்தின் அடிப்படையில் அகழாய்வு நடந்திருக்கிறது. இன்னும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு செய்யும் போது, சங்க காலத்தில் சொல்லப்பட்டது உண்மை என்பது தெரிய வரும். அப்படிதான் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடி பற்றிக் கண்டறியப்பட்டிருந்தால், வரலாற்றுப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+