வெங்காய விவசாயிகளுக்கு நற்செய்தி! கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு.. இன்று முதல் அமலாகிறது!
சென்னை: இந்தியாவின் வெங்காய விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய விலை இன்று (ஜூன் 13) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது ஒரு கிலோ வெங்காயத்திற்கான கொள்முதல் விலை ரூ.15.80 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதனை கிலோவுக்கு ரூ.16.50 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட கொள்முதல் விலை ரூ.1,580-இல் இருந்து ரூ.1,650 ஆக உயர்ந்துள்ளது.

வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், சந்தை விலை சரிவால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
வெங்காயம்
குறிப்பாக, சேமிப்புக்கு ஏற்ற தரமான வெங்காயங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட விலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, வெங்காய கொள்முதல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், சந்தை நிலவரம் மற்றும் தர அடிப்படையில் வெங்காய கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,650 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெங்காயம்
நாட்டில் வெங்காய விலை அடிக்கடி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலமுறை நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில், அரசின் கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வெங்காய கொள்முதல் திட்டம் கடந்த மே 15-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 2025-26 நிதியாண்டுக்காக 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
கொள்முதல் விலை
ஆனால் பின்னர் அந்த இலக்கு 2 லட்சம் டன்னாக குறைக்கப்பட்டது. இருப்பினும், விவசாயிகளுக்கு ஆதரவாக கொள்முதல் விலையை உயர்த்தியிருப்பது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. வெங்காயம் இந்திய சமையலில் அத்தியாவசிய இடத்தை பிடித்துள்ளதால், அதன் விலை மாற்றங்கள் நேரடியாக விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதிக்கின்றன. ஒரு புறம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற தேவை இருக்கிறது. மறுபுறம், சந்தையில் சில்லறை விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
மத்திய அரசு
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இடையிடையே கொள்முதல் விலை மற்றும் இருப்பு மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்முதல் விலை, குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது. மேலும், சந்தையில் விலை நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications