வறண்ட வானிலைக்கு நடுவே.. சாரல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், வரும் 31ம் தேதி முதல் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையுடன் பருவமழை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் பரவலாக வறண்ட வானிலைதான் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உறைபனி குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜன. 29, 30) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், வரும் 31 முதல் பிப். 2-ம் தேதி வரை தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். பிப். 3-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இரவு அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல மறுபுறம் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் இளவேனில், முத்து வேனில், கார்காலம், குளிர் காலம், முன் பனி, பின் பனி என பிரிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி நடுப்பகுதி வரை முன் பனி காலகமாகவும், பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கி ஏப்ரல் நடுப்பகுதி வரை பின் பனி காலமாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
தற்போதும் நாம் முன் பனி காலத்தில் இருக்கிறோம். குளிர் அதிகமாக இருக்கிறது. பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவிலும், மேற்கு கடற்கரை பகுதியான கேரளாவின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் இயல்பான அளவை விட வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.7 டிகிரி செல்சியஸ். ஆனால் இந்த முறை பதிவான வெப்பம் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பத்தை விட அதிகமாக இருக்கிறது. இரவில் குளிர் அதிகமாக இருந்தாலும் பகல் நேரத்தில் பதிவாகும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கோடை காலம் குறித்த எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications