நிலவுக்கு உயிர் கொடுக்கும் பூமி.. சந்திரயான் 2 கண்டுபிடித்த முக்கிய விஷயம்! இஸ்ரோ புது சாதனை
சென்னை: நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது, அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதை சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இறந்து போன கிரகத்தில்தான் மின்னணு அடர்த்தி குறைவாக இருக்கும். அந்த வகையில் நிலவுக்கு பூமி உயிர் கொடுப்பதாக விஞ்ஞானிகள் கருதியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மூலம் பின்னாட்களில் மனிதர்கள் நிலவில் இறங்கும்போது எந்த சிக்கலும் ஏற்படாமல் அவர்களை பாதுகாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு வழியாக உலகத்திற்கு புதிய தகவலை இஸ்ரோ கொடுத்திருக்கிறது. இது இந்தியாவுக்கு பெருமையான விஷயம்.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும் நாட்களில் அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிலவில் நாம் எந்த மாதிரியான மின்னணு கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஒரு புரிதல் உருவாகும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான்-2 என்ன கண்டுபிடித்தது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனில், சில அடிப்படையான விஷயங்களை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
காந்த வளையம் என்றால் என்ன?:
பூமி கண்களுக்கு தெரியாத காந்த வளையத்தால் (Magnetic Field) சூழப்பட்டிருக்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் காற்றிலிருந்து (Solar Wind) இது நம்மை பாதுகாக்கிறது. ஒருவேளை பூமியை சுற்றி Magnetic Field இல்லையெனில், Solar Wind கம்ப்யூட்டர் தொடங்கி, செல்போன், செயற்கைக்கோள்கள் என அனைத்து மின்னணு கருவிகளையும் பாதிக்கும். இந்த செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட சூரிய காற்று நமது காந்த வளையத்தை பாதித்துக்கொண்டே இருக்கிறது.
நிலவின் மின்னணு அடர்த்தி
காந்த வளையம் பாதிக்கப்படும்போது அது பூமிக்கு பின்னால் வால் (Geomagnetic Tail) போன்ற அமைப்பை உருவாக்குகிறது. ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் லாரியிலிருந்து சிந்திய நீர்.. ஒரு வால் போல உருவாகிறதே அப்படித்தான். ஒவ்வொரு மாதமும் 4 நாட்கள் இந்த பூமியின் காந்த வால் பகுதிக்கு நிலவு வரும். அப்படி வரும்போது நிலவின் மின்னணு அடர்த்தி 23,000 electrons per cubic cm என்கிற அளவில் உயர்ந்திருக்கிறது. இது வழக்கமான மின்னணு அடர்த்தியை விட 100 மடங்கு அதிகம்.
இஸ்ரோவின் கண்டுபிடிப்பு
சரி இதை எப்படி சந்திரயான் 2 கண்டுபிடித்தது என்று கேட்கிறீர்களா.. ரேடியோ ஒக்கல்டேஷன் பரிசோதனை (Radio Occultation Experiment) என்ற முறையை பயன்படுத்தி இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது Chandrayaan-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் S-band Telemetry and Telecommand (TTC) ரேடியோ சிக்னல்களை நிலவை நோக்கி அனுப்பியுள்ளது. சிக்னல்கள் நிலாவின் மின்சுற்று (ionosphere) வழியாக சென்றபோது மாற்றங்கள் தெரிந்திருக்கின்றன. இந்த மாற்றங்களை Indian Deep Space Network மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இஸ்ரோவின் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்திலுள்ள விஞ்ஞானிகள் பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஆய்வு செய்தபோது விஷயம் தெரிந்திருக்கிறது. சரி இந்த கண்டுபிடிப்பால் என்ன பலன் என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். அதற்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் புதிய சாதனை
இந்தியா சார்பில் இதுவரை யாரும் நிலவுக்கு போகவில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இதனை நாம் சாதிக்க போகிறோம். நிலவுக்கு போவது சுலபமான காரியம் இல்லை. நிலவில் மனிதர்கள் தரையிறங்கும்போது அங்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் டேமேஜ் ஆகக்கூடாது. அதற்கு நிலவின் மின்னணு அடர்த்தி என்ன? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது சந்திராயன் 2ன் கண்டுபிடிப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications