மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை உயர்த்துவது குறித்து குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லை என்றும் உதவித்தொகை மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமான உதவித்தொகையை தமிழ்நாடு அரசு நிர்ணயித்து வழங்கக்கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது.
கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அவமானப்படுத்தாதீர்கள்
அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என்றும், குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசு விளக்கம்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பாகுபாடு காட்டப்படவில்லை எனவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 21 வகையான மாற்றுத் திறனாளிகளில் 5 வகையினர் வேலைக்கு சென்று வருமானம் ஈட்ட முடியாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2000 வீதம் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள்
உதவித் தொகை மட்டுமல்லாமல் போக்குவரத்தில் சலுகை, மருத்துவ உதவி, ரேசன் சலுகை உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. எனவே சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கை தர வேண்டும் என நீதிமன்றம் கேட்கவில்லை என்றும், அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தே நீதிமன்றம் அறிய விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

குழு அமைக்க அறிவுறுத்தல்
மேலும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என மறுத்த நீதிபதிகள், அவர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications