கிளாம்பாக்கத்தை விடுங்க.. செங்கல்பட்டு செமயா மாறப்போகுது.. வருகிறது பிரம்மாண்ட பேருந்து நிலையம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன.
கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. செங்கல்பட்டில் பஸ் ஸ்டான்ட் அமைக்க டெண்டா் கோரப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் இங்கே அமைக்கப்பட உள்ளது.
சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பலர் இதனால் செங்கல்பட்டில் வசிக்க விரும்பி வருகிறார்கள். இதனால் அங்கே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கே பேருந்து நிலையத்தை புதிதாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெண்பாக்கம் ஊராட்சி அருகே 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications