நேற்று போலீசாரை அலறவிட்ட சுபாஷ் கோர்ட்டில் ஆஜர்.. நீதிபதி போட்ட உத்தரவு! கீழ்ப்பாக்கத்துக்கு ஷிப்ட்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே லாரி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சுபாஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சுபாஷை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு லாரி கடத்தல் சம்பவம் ஜிஎஸ்டி சாலை பகுதியையே அதிர வைத்த நிலையில் போலீசார் சேசிங் செய்து லாரியை கடத்திய நபரை பிடித்தனர். இந்நிலையில் அவர் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் அன்பு என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது ஓட்டுநர் நேற்று காலை மேல்மருவத்தூர் பகுதி கல்குவாரியில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, பாஸ்ட் ட்ராக்கில் போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரங்கட்டிய டிரைவர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸ்ட் ட்ராக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.
அந்த சமயத்தில் சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை எடுத்து, சென்னையை நோக்கி அதிவேகமாக இயக்கத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, அருகில் இருந்த போலீஸ்காரரிடம் தெரிவித்தார்.
ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இது தொடர்பாக அருகில் இருந்த காவலர்களுக்கு தெரிவித்தனர். மஹிந்திரா சிட்டி சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போலீசார் பேரிகேடுகளை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இருசக்கர வாகனத்தில் ஒருபுறம் போலீசார் லாரியை வேகமாக பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது லாவகமாக போலீஸ்காரர் ஒருவர் லாரியில் ஏறி, தொங்கியபடி சென்று ஓட்டுநரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன் என்பவர் லாரியை பிடித்து தொங்கியபடி 5 கிமீ தூரத்துக்கு பயணம் செய்தார்.
மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்று சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறாக பொதுமக்களை, இடித்து தள்ளும் வகையில் அவர் லாரியை ஓட்டியது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை கடத்திச் சென்றவர் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது. சுபாஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் சுபாஷை ஆஜர்படுத்தினர். சுபாஷை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுபாஷ்.












Click it and Unblock the Notifications