சென்னையில் 276 கோடியில் 12 புதிய பாலங்கள்.. 4 ஆண்டுகளில் நடந்த பெரிய மாற்றம்.. மாநகராட்சி விளக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் புதிய பாலங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பாலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. தேவை கருதி சென்னையில் பெரும்பாலான சிக்னல்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக இருக்கிறது. வெறும் 25 கிலோமீட்டர் சுற்றளவில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். இதனால் பல லட்சம் வாகனங்கள் தினமும் நகருக்குள் வெளியேறுவதும், நகருக்குள் செல்வது, அலுவலகம் செல்வதுமாக இருக்கிறது, ஓஎம்ஆர், ஈசிஆர், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி சாலை, எண்ணூர் சாலை, அம்பத்தூர் சாலை, நியூ ஆவடி சாலை, மயிலாப்பூர் கச்சேரி சாலை, ஆழ்வார் பேட்டை சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி மேடவாக்கம் சாலை, ரேடியல் சாலை, குன்றத்தூர் சாலை என எல்லா சாலைகளும் வாகன நெருக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பீக் அவர்ஸ்களில் வாகனங்களில் செல்வது மிகவும் சவாலானதாக இருக்கிறது. சிக்னல்கள், ரயில்வே கேட்டுகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12 மேம்பாலங்கள் கட்டப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் புதிய பாலங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பாலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கொளத்தூர் பிரதான சாலை மற்றும் ஐ.சி.எப். சாலையை இணைக்கும் வகையில் மேயர் சிட்டிபாபு பாலம், திரு.வி.க.நகர் மண்டலத்தில் செங்கை சிவம் பாலம், ராயபுரம் மண்டலத்தில் யானைக்கவுனி மேம்பாலம், போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப்பாதை கூவம் ஆற்றின் குறுக்கே அருணாச்சலம் சாலையில் புதிய பாலம், தியாகராயநகர் ஆகாய நடைமேம்பாலம், புழல் உபரிநீர் கால்வாய் குறுக்கே ஆமுல்லைவாயல் பாலம், மணலி பர்மா நகர் பாலம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் பாலம், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையின் குறுக்கே நடைமேம்பாலம், ஆலந்தூர் மண்டலத்தில் ஜீவன் நகர் பாலம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே பெட்டக வடிவப் பாலம் என 12 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, தண்டையார்பேட்டை கே.பி.கே. நகர் பாலம், வைத்தியநாதன் பாலத்தில் ரூ.6.92 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக இந்த 14 பாலங்கள் மூலம் நாள் தோறும் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications