காதலை துண்டித்த டியூஷன் டீச்சர்! 17 வயது சிறுவனின் "கேஷ் ஆன் டெலிவரி" டார்ச்சர்! சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் காதலை தொடர மறுத்த டியூஷன் டீச்சருக்கு ஆன்லைனில் பரிசு பொருட்களை அனுப்பிய 17 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல் ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார்களையும் அவர் புக் செய்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் 22 வயதான கல்லூரி மாணவி. இவர் தனது வீட்டில் டியூஷன் எடுத்து வந்தார். இந்த நிலையில் அந்த டியூஷனுக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் படித்து வந்தார்.

அப்போது அந்த கல்லூரி மாணவிக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் புத்திமதி கூறி அந்த சிறுவனுடனான காதலை முறிக்க சொன்னார்கள்.
இதையடுத்து அந்த மாணவி, அந்த சிறுவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் மன வேதனையடைந்த அந்த சிறுவன், அந்த மாணவியிடம் பேச முயற்சித்தார். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் மீது சிறுவன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
பிறகு அந்த கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு இரு நாட்களில் அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களை செய்து கேஷ் ஆன் டெலிவரி கொடுத்து டார்ச்சர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 77 முறை ஓலா, ஊபரில் வாகனங்களை புக் செய்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
மேலும் மேலும் அந்த பெண்ணுக்கு தொந்தரவு அதிகரித்த நிலையில் கடந்த மாதம் 2ஆம் தேதி அவர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணிலிருந்து ஒருவர் அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும் தனது மகளின் அனுமதியின்றி ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் செயலியில் பயன்படுத்தப்பட்ட இ மெயில், தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இறுதியில் பெண்ணை தொந்தரவு செய்த 17 வயது சிறுவனை கடந்த 20ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து இரு செல்போன்கள், வைஃபை ரவுட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர். இதையடுத்து அந்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications