நேருக்கு நேர் மோதி அப்பளமாக நொறுங்கிய பேருந்துகள்.. வேளச்சேரியில் ஸ்தம்பித்த போக்குவரத்து
சென்னை: சென்னையில் பரபரப்பான காலை நேரம் வண்டி ஓட்டி செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்நிலையில் வேளச்சேரி அருகே இன்று காலை 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேருந்துகளின் முன் பக்கம் நொறுங்கி பேருந்து ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தார்கள். இதனால் வேளச்சேரியில் காலை சுமார் 1 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள், கார்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேநேரத்தில் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி
எம்டிசி பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். வாகனங்கள் அதிகமாவதால் அதிவேகம் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் செயல்களும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அவ்வபோது விபத்துகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் காலை, மாலை பீக் ஹவர்ஸ்களில் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடி கொண்டிருக்கிறார்கள். இன்று காலை 7 மணியளவில் 51V பேருந்து சைதாப்பேட்டையில் இருந்து கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. வேளச்சேரி சாலை தண்டிஸ்வரம் கோயில் அருகே அந்த பேருந்து செல்லும்போது, எதிரில் M51V (கொளத்தூர் - தியாகராய நகர்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
8 பேர் காயம்
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன் பக்கமும் கடுமையாக சேதமடைந்தன. இதில் பேருந்து ஓட்டுநர் அன்பழகன், பயணிகள் பாண்டியன், தினகரன், விமலா, சசிகலா உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காலை நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டது. சென்னையின் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால், அந்தப் பகுதியில் இன்று காலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பலரும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.
விபத்து நடந்தது எப்படி
தகவலறிந்து வந்த அடையார் போக்குவரத்து காவல்துறையினர், அங்கிருந்து பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அந்தப் பகுதி வளைவான சாலைகளை கொண்டுள்ளது.
காலை நேரம் என்பதால், 2 பேருந்துகளும் அதிவேகத்தில் சென்றுள்ளன. இதன் காரணமாக விபத்து நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. "அங்குள்ள குறுகலான சாலையில் இருசக்கர வாகனங்களை அப்படியே நிறுத்தி செல்வதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கு காரணம்." என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications