சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல கிளப்.. ரூ.119 கோடி வாடகை பாக்கி.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் நிர்வாகம் குத்தகை நிலத்துக்கு ரூ.119 கோடி வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.. இந்த நோட்டீஸை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நந்தனம் பகுதியில் 77.70 ஏக்கர் அரசு நிலம் 1933-ம் ஆண்டு கோல்ப் விளையாட்டு மைதானம் அமைக்க காஸ்மோபாலிட்டன் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதில், 1971-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு கிளப் நிர்வாகம் குத்தகை தொகையை செலுத்தவில்லை.

இதையடுத்து, மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் கடந்த 2004-ம் ஆண்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில் காஸ்மோபாலிட்டன் கிளப் நிர்வாகம் 119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை தொகையை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது..
119 கோடியே 78 லட்சத்து 58 ஆயிரத்து 312 ரூபாய் குத்தகை தொகையை செலுத்த கோரிய வட்டாட்சியரின் நோட்டீசை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "2015-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்குள் 25 கோடி ரூபாயை முதல் தவணையாக செலுத்த வேண்டும். வாடகை வசூல் நடவடிக்கை தொடர்பான நோட்டீசில் உரிய விசாரணையை மேற்கொண்டு, உண்மையான வாடகை பாக்கியை தீர்மானிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், "குத்தகை தொகையை நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், மாவட்ட கலெக்டருக்கோ, வட்டாட்சியருக்கோ அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக அவர்கள் நோட்டீஸ் அனுப்பவோ, வாடகையை உயர்த்தவோ முடியாது என்றும் கூறினார்கள்.
மேலும் ரூ.119 கோடியே 78 லட்சம் வாடகை பாக்கி செலுத்தும்படி, மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசையும், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்கிறோம்'' என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications