முதல்ல ரோடு சரி பண்ணுங்க.. சென்னை டூ பெங்களூர் ஹைவேஸ் படுமோசம்.. டெல்லிக்கு போன தயாநிதி மாறன் கடிதம்
சென்னை: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் தன்னுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால், மிகவும் தாமதமாக நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. ராணிப்பேட்டை-வாலாஜாபேட் பிரிவு விரிவாக்கம் திட்டமும் மீண்டும் தாமதமாகியுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டரும், ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்த திட்டம் இதுவரை 18 முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஆணையம்: சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையின் (NH-48) ஸ்ரீபெரும்புதூர்-கிருஷ்ணகிரி பகுதியில் நடந்து கொண்டிருக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன,, இப்படி பல்வேறு இடங்களில் பணிகள் தாமதமாகி கொண்டிருக்கின்றன..
கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை, ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆணையம் இடையேயான தகராறு இப்படி பல்வேறு காரணங்களால், இந்த பணிகள் தாமதமாகி வருவதாக சொல்கிறார்கள்.
வசூல் : இதனால், நகரப்பகுதியில் ஏகப்பட்ட டிராபிக் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. இதற்கு நடுவில், நெடுஞ்சாலை ஆணையமானது, நூற்றுக்கணக்கான கோடிகளை டோல் கட்டணமாக வசூலிப்பதாகவும் அதிருப்திகள் கிளம்பி வருகின்றன..
இப்படிப்பட்ட சூழலில், மத்திய ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சுங்கக்கட்டணம்: அதில், "சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளாலும், மிக சோமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications