கிளாம்பாக்கத்தையே சொல்லாதீங்க.. இங்கே பாருங்க.. தமிழக அரசின் அதிரடியை.. மதுரை, கோவை, சென்னை துள்ளுதே
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை கையிலெடுத்து வரும்நிலையில், அடுத்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தயாராகி வருகிறது.. பயணிகளின் வசதிக்காக, பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இந்த முனையம் தயாராகி வருகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு விடுத்திருந்தனர்.

அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க, அரசு முயற்சி மேற்கொண்டிருந்தாலும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என்று கூறியிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின்: குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றெல்லாம் தகவல்கள் கிடைத்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவம் வகையில் வசதிகள் செய்து தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பிறகு, மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற அடுத்த கோரிக்கை பரவலாக எழுந்தது.
வளையம்: அதாவது, சென்னை, மாநகர பஸ்களில், குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருந்தாலும், ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று யாருமே கண்காணிப்பதில்லையாம்..
ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம். தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்.. அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்ற கோரிக்கையும் அரசுக்கு பறந்தது.
போக்குவரத்து கழகம்: இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும்வகையில், அரசு ஒரு நற்செய்தியை அறிவித்திருக்கிறது. அந்தவகையில், சென்னை அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தவிர கோவை, மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாம்..
இதில், தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
புது பஸ்கள்: கடந்த மார்ச் மாதம், அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. இதற்கான நடவடிக்கையிலும் தமிழக அரசு மும்முரமாகி உள்ள நிலையில், மாற்று திறனாளிகளுக்கான முழு வசதிகளும் அவைகளில் செய்து தரப்படும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications