திருவள்ளூர்காரன்.. வெட்டுங்கடா.. ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் வெறியாட்டம்.. சென்னையில் பகீர்!
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இன்று மாநிலக் கல்லூரி மாணவர்கள், சக மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிரசிடென்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி மாணவர்களிடையே நிலவி வந்த பகையுணர்வு காரணமாக இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

திருவள்ளூரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 20). இவர் சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிற்பகல் திருவள்ளூர் செல்லும் ரயிலில் ஏறுவதற்காக கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தார் சத்தியமூர்த்தி. அப்போது அங்கு வந்த கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்கள் 8 பேர், சத்தியமூர்த்தியிடம் எந்த ஊர் என விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர் திருவள்ளூர் என பதிலளிக்கவே, இவன் திருவள்ளூர் காரன்.. வெட்டுங்கடா என ஆவேசமாகக் கூறியபடி, அந்த மாணவரைத் தாக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்தும் அவர்களிடமிருந்து தப்பித்து சத்தியமூர்த்தி அங்கிருந்து ஓடியுள்ளார். ஓட ஓட விரட்டிச் சென்று சத்தியமூர்த்தியின் தலை மற்றும் கையில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
இதைப் பார்த்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரை அரிவாளால் வெட்டிய 8 பேரையும் தேடி வருகின்றனர்.

ரயில்வே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மாநிலக் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதி, மதம், மொழி என பல்வேறு பிரிவினைகள் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் நிலையில், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படும் இடமாக கல்வி நிலையம் உள்ளது. அப்படிப்பட்ட கல்லூரியிலேயே, ஊர் தொடர்பான சண்டையில் அரிவாளால் மாணவர்கள் வெட்டிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications