விரைவில் கொரோனா இல்லாத தலைநகர்! சென்னை முழுவதும் 200 வேக்சின் முகாம்கள்..மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 200 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு, தியோட்டர்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் பணிகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 200 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது.

யாருக்கு முன்னுரிமை
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குச் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி கல்லூரி மாணவர்கள்
தொடர்ந்து, தற்பொழுது செப்.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 27.08.2021 முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 28.08.2021 அன்று முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 01.09.2021 அன்று முதல் 112 கல்லூரிகளில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

200 தடுப்பூசி முகாம்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் 01.09.2021 முதல் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் செப்.1ஆம் தேதி முதல் வார்டிற்கு 1முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் வேக்சின் முகாம்கள்
கடந்த 26.08.2021 அன்று 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1.35 லட்சம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த 200 தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் இணையதளம் வாயிலாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கொள்ள மாநகராட்சியின் gccvaccine.in என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எத்தனை பேருக்கு வேக்சின்
இந்தத் தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 29.08.2021 வரை 27,17,705 முதல் தவணை தடுப்பூசிகள், 1211,775 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 39,29,480 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications