மெரினாவில் வாக்கிங் போறீங்களா ஓகே.. கடற்கரைக்கு செல்ல இன்று முதல் அனுமதி இல்லை!
சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் இருக்கிறது. இதனிடையே ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 31 -ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை வரை வாகனங்கள் இயக்க தமிழக காவல் துறை தடை விதித்திருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ரிசார்ட்
ஹோட்டல்கள், ரிசார்ட்கள், பப்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அது போல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏராளமானோர்
அதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மெரினா கடற்கரைக்கு பொழுது கழிக்க ஏராளமானோர் வருவதை தடுக்கும் வகையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல முயன்றால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள போலீசார், அவர்களை தடுத்து நிறுத்துவார்கள்.

மறு உத்தரவு
இந்த தடை உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக நடைபாதையில் செல்வதற்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓமிக்ரான்
தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 92 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் சமூகபரவலாக மாறிவிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications