சிரிக்கலாம்.. பறக்கலாம்! சென்னை கலரே மாறப் போகுது! மெரினா ரோப் கார் சேவை! டெண்டர் கோரிய மாநகராட்சி
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை தொடங்க இருப்பதாக சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது சென்னை மாநகராட்சி தற்போது கட்டுமான பணி தொடர்பான சென்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா ரோப் கார் பணிகள் விரைவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. நாள்தோறும் அந்த கடற்கரையில் நடைப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். மேலும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.

மாலை நேரங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்கள் காணும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் தலைவர்களின் நினைவிடங்களும் அமைந்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்கனவே நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் திண்டுக்கல்லில் பழனி முருகன் கோவிலில் உள்ள ரோப் கார் சேவை போல பெசன்ட் நகரில் இருந்து மெரினா கடற்கரை வரை ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதை அடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி உள்ளது சென்னை மாநகராட்சி. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ஆலோசனை, விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. வருகிற 17ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் இந்த டென்டருக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மக்களின் நீண்டகால கோரிக்கையான ரோப் கார் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications