சென்னை தேனாம்பேட்டையில் 2 பழமையான கோவில்கள் இடித்து அகற்றம்.. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சென்னை: சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள தியாகராய சாலை, திரு.வி.க. குடியிருப்புப் பகுதி வழியாக மாம்பலம் கால்வாய் செல்கிறது. இந்த மாம்பலம் கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அந்த கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 பழமையான கோவில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். முன்னதாக, கோவிலில் இருந்த அம்மன் மற்றும் விநாயகர் சிலைகளை அவர்களே அகற்றி எடுத்துக் கொண்டனர்.
சென்னையில் பல்வேறு சாலைகள், கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி வருகிறார்கள்.. குறிப்பாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோயில்கள், வீடுகள், கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அவற்றை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றி வருகிறார்கள். அந்த வகையில் தேனாம்பேட்டையில் வெள்ளக்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்து வந்த பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு கோயில்களை அகற்றியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள தியாகராய சாலை, திரு.வி.க. குடியிருப்புப் பகுதி வழியாக மாம்பலம் கால்வாய் செல்கிறது. இந்த மாம்பலம் கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் 48 ஆண்டுகள் பழமையான ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது.
இந்த ஆக்கிரமிப்பால் அந்த பகுதியில் உள்ள திரு.வி.க. குடியிருப்பு, கிரியப்பா சாலை, நக்கீரன் குடியிருப்பு, எம்.கே.ராதா நகர், எஸ்.எஸ்.புரம், பத்ரிகரை உள்ளிட்ட 20 குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரின் ஒத்துழைப்புடன் 2 கோவில்களையும் முழுவதுமாக இடித்து அகற்றினர். இந்த பணிகள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் இருந்த அம்மன் மற்றும் விநாயகர் சிலைகளை அவர்களே அகற்றி எடுத்துக் கொண்டனர்.
மேலும், இதரக் கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மண்டல அலுவலர் பி.எஸ்.சீனிவாசன், உதவி செயற்பொறியாளர், ஜி.வித்யா, துப்புரவு மேற்பார்வையாளர்கள், பூங்கா பணியாளர்கள் ஆகியோர் மேற்கொண்டனர்.
மாம்பலம் கால்வாயை தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்தும், அதன் மேல் குப்பை மற்றும் கழிவுகள் போடாத வகையில் கம்பி வேலி அமைத்தும் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது" இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications