கொரோனா உறுதியானால் குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: சென்னை மாநகராட்சி
சென்னை: கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவரது குடும்பத்தினர் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனிவருங் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவுகள் வரும் வரையிலும் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் புதிய நடைமுறைப்படி, அவர்கள் வழக்கம் போல் அவரது பணியினை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும் முக கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்தும் மேற்கொள்ளலாம்.
மேலும் கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான அனைத்து ஸ்கிரீனிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவமனைகளிலோ, கோவிட் பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications