சொத்து வரி தொடர்பாக சந்தேகமா? மண்டல அலுவலகங்களில் தனி கவுன்ட்டர்கள்.. சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கவுன்ட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடப்பாண்டு முதலாக சொத்து வரியை தமிழக அரசு கணிசமாக உயர்த்தியது. சென்னையை பொறுத்தவரை, பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், சென்னையுடன் 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
மேலும், சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் உள்ள 600 முதல் 1200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளதாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு பல தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனினும், சொத்து வரி உயர்வில் தமிழக அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கவுன்ட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பு
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், சொத்துவரி சீராய்வை மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துகள் முறையாக பரிசீலிக்கப்பட்டன.
பின்னர்மன்றத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள இனங்களின் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டு முதலே சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, சொத்துவரி பொதுசீராய்வு அறிவிப்புகள் அஞ்சல்துறை மூலமாக, சொத்து உரிமையாளர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ரூ.472 கோடி சொத்து வரி வசூல்
இதுவரை 11 லட்சத்து 58 ஆயிரத்து 79 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி சீராய்வுஅறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பொது சொத்துவரி சீராய்வின் தொடர்ச்சியாக இதுவரை 5 லட்சத்து 75 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் ரூ.472 கோடியே 88 லட்சம் வரியை செலுத்தியுள்ளனர்.

இணையதளம் மூலமும் அறிய வசதி
தற்போது, சொத்து வரிபொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவுக்கு சதுர அடி அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிய, மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/citizenCalc.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரி விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

தனி கவுன்ட்டர்கள்
மேலும், சொத்து வரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி தொடர்பாக எழும்சந்தேகங்கள் மற்றும் கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெற, மாநகராட்சியின் அனைத்துமண்டலங்களிலும் தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி தொடர்பான, சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் ஆகியவை குறித்து தெளிவுபெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications