கேஸ் சிலிண்டர் காலி.. சென்னையில் பெட்ரோலும் இல்லயா? மழைநீரில் கலந்ததா பெட்ரோல்? சங்கம் விளக்கம்: செம
சென்னை: சென்னையில் இன்றும்கூட சில பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விநியோகம் தாமதம் ஏன் என்பது குறித்த விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சென்னையே தனித்தீவு போல ஆகிவிட்டது.. சாலைகள் எல்லாமே வெள்ளக்காடாக காட்சி தந்தன.. போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.. அவசர தேவைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.. இன்றுகூட நிறைய கடைகள் திறக்கப்படவில்லை.. இன்னும் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை என்றாலும், மழைநீரை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமலேயே உள்ளது..
மளிகை கடைகள்: நேற்றைய தினம் இன்னும் நிலைமை மோசம்.. மளிகை, காய்கறி கடைகள் இல்லாமல் சமைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.. ஆன்லைனிலும் உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை.. வீடுகளில் நிறைய பேருக்கு சிலிண்டர் விநியோகமும் செய்ய முடியவில்லை.. சில ஆம்புலன்கஸ்களே, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் நடுரோட்டில் நீரில் சிக்கி நின்றுவிட்டன..
பெருக்கெடுக்கும் வெள்ள நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் அப்படி அப்படியே சாலைகளில் நின்றுவிட்டனர்.. இடுப்பளவு தண்ணீர் சென்றதால், வாகனங்களை விட்டுவிட்டுகூட சாலைகளை கடக்க முடியவில்லை.. இதனால், பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரிக்க துவங்கியது.. பல இடங்களில் கரண்ட் இல்லாததால், இரவுக்குள் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பி விட வேண்டும் என்பதற்காக, நேற்று மதியம் முதலே சென்னையின் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிய துவங்கினர்.
பங்குகள்: ஆனால், சென்னையில் பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டன.. அண்ணாசாலை மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதுமே, வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டதால், வேறு பகுதிகளுக்கு சென்று பெட்ரோல், டீசல் வாங்க முடியாமலும் அவதிக்கு ஆளானார்கள்.. எனவே பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்க்குகளுக்கு சென்று, பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கி செல்ல முயன்றனர்.. இதனால் நிறைய பெட்ரோல் பங்குகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
விநியோகம்: இந்நிலையில், பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன்? என்றும் பெட்ரோல் தட்டுப்பாடுக்கு என்ன காரணம் என்றும், பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தற்போது விளக்கமளித்துள்ளது.
பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சொன்னதாவது: "மழை நீர் கலந்திருக்கக்கூடும் என்பதால் பெட்ரோல், டீசலை உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநியோகம்: டீசலில் தண்ணீர் கலந்தால் எளிதில் பிரித்தெடுத்து உடனே விநியோகிக்க முடியும், தண்ணீர் கலந்த பெட்ரோலை விநியோகித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உரிய ஆய்வு செய்து விநியோகம், தண்ணீர் கலக்கப்படவில்லை என்று உறுதிசெய்த பிறகே பெட்ரோல் விநியோகிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, எத்தனால் கலந்த பெட்ரோலில் கலந்துவிட்டால் நீரை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்" என்று விளக்கம் தந்துள்ளது.












Click it and Unblock the Notifications