போலீஸ் காட்டிய பெருந்தன்மை.. கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது எப்படி? கோர்ட்டில் நடந்தது என்ன
சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மனிதாபிமான அடிப்படையில் சென்னை போலீஸ் காட்டிய பெருந்தன்மையால் நடிகை கஸ்தூரிக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மறுநாள் கஸ்தூரி மன்னிப்பு கோரினார். தான் பேசிய கருத்து யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக கஸ்தூரி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் கேட்டார்.
ஆனாலும் கஸ்தூரிக்கு எதிராக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டன. சென்னை எழும்பூர், மதுரை, தேனி மாவட்டம் உள்பட பல இடங்களில் கஸ்தூரி மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக்கோரி சென்னை எழும்பூர் போலீசார் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்ப சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டி இருந்தது. கஸ்தூரியும் அங்கு இல்லை.
இதையடுத்து சம்மனை வீட்டில் ஒட்டிய போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கஸ்தூரியை தீவிரமாக தேடினர். இதற்கிடையே வழக்கில் முன்ஜாமீன் கோரிய கஸ்தூரியின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனு தள்ளுபடியான நிலையில் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை கடந்த 16ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அதன்பிறகு 17 ம் தேதி அவரை போலீசார் சென்னை அழைத்து வந்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது தனக்கு ஆட்டிஸம் பாதித்த குழந்தை உள்ளது. சிங்கிள் மதர் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கஸ்தூரி நீதிபதியிடம் கூறினார். ஆனால் நீதிபதி கஸ்தூரியின் கோரிக்கையை ஏற்கவில்லை. அவரை நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கஸ்தூரி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகை கஸ்தூரி தான் ஒரு சிங்கிள் மதர். மேலும் ஆட்டிஸம் பாதித்த ஸ்பெஷல் குழந்தையின் தாயாராக இருப்பதை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரினார். இந்த மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை போலீஸ் தரப்பில் கஸ்தூரியின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. கஸ்தூரியின் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் போலீசார் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் மாலையில் நீதிமன்றம் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.
நடிகை கஸ்தூரி மீது இன்னும் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் என்பது கிடைக்காமல் இருந்திருக்கும். ஒருவேளை ஜாமீன் கிடைத்தாலும் கூட போலீசார் அடுத்த வழக்குகளில் உடனடியாக கைது செய்யலாம். ஆனால் போலீசார் பெருந்தன்மையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் கஸ்தூரியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இதன்மூலம் கஸ்தூரி ஜாமீன் புழல் சிறையில் இருந்து இன்று அல்லது நாளை காலையில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications