திருநெல்வேலிக்கே தித்திப்பான செய்தி.. கலகலப்பாக மாறப்போகும் கன்னியாகுமரி.. ரயில்வே சூப்பர் முடிவு
சென்னை: சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே கோடை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பொதுவாக கோடைகால விடுமுறையின் போது பயணிகளின் வசதிக்காகவும்., கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஏராளமான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் சேவை மேலும் சில காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்து. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06070) வரும் ஜூன் 6, 13, 20, 27 (வியாழக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்(06069) வரும் ஜூன் 7, 14, 21, 28 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06019) வரும் ஜூன் 2, 16, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06020) வரும் ஜூன் 3, 17 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ரயில்: இதேபோல, நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06021) வரும் ஜூன் 9, 23 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06022) வரும் ஜூன் 10, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட இருக்கும் இந்த ரயில்கள் ஏற்கனவே சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டது. தற்போது, மேற்கண்ட தேதிகள் முதல் இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருத்தப்பட்ட அட்டவணை மற்றும் நிறுத்தங்களுடன் நாகர்கோவிலுக்கு இயக்கப்பட உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications