தொழில்நுட்ப கோளாறு.. வானத்தில் வட்டமடித்த சென்னை விமானங்கள்.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்
சென்னை: சென்னையிலிருந்து புறப்பட்ட விமானங்களில் 2, நடுவானில் தொழில்நுட்ப கோளறால் பாதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக ஓடுதளத்தை விமானி சரியாக பார்க்க முடியாத நிலை உருவானது. இதனையடுத்து விமான சேவைகள் தாமதமாகின. மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வந்து சேர வேண்டிய 15 விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமலும், வந்த சேர வேண்டிய விமானங்கள் தாமதமாகின.

தவிர இரண்டு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சென்னையிலிருந்து மும்பைக்கு அதிகாலை 4.40 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 168 பணிகள் இருந்தனர். விமானம் நடு வானிலை சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பியுள்ளார். விமானியின் சாமர்த்தியத்தால் அனைத்து பயணிகளும் உயிர் பிழைத்துள்ளனர்.
அதேபோல சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதில் 90 பயணிகள் இருந்திருக்கின்றனர். இதனையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே விமான சேவையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக வெளிநாடுகள் செல்லும் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. எனவே விமானங்கள் சம்பந்தமே இல்லாத நாடுகளில் தரையிறக்கப்பட்டு முழுமையாக சோதிக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது இதுபோன்ற மிரட்டல்கள் ஓரளவுக்கு குறைந்திருக்கின்றன.
ஆனால் மோசமான வானிலை காரணமாக தற்போது விமான சேவை பாதிக்கப்டப்டிருக்கிறது. இதனையடுத்து பயணிகள் சிரமத்திற்கு விமான நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications