ஏர்போர்ட் டூ கிளாம்பாக்கம்.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் தினமும் போறீங்களா? வருது 18.4 கி.மீ அதிசயம்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்கு தமிழக அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கிராண்ட் சதர்ன் டிரங்க் (GST) சாலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஆறு வழி elevated corridor அமைப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தொடங்கவுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) முதல் மஹிந்திரா சிட்டி சந்திப்பு வரை 18.4 கி.மீ தூரத்திற்கு இந்த elevated corridor அமையும். GST சாலையின் நடுப்பகுதியில் தூண்கள் அமைத்து இது கட்டப்படும். மூன்று இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் ramp-கள் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ₹3,200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிராண்ட் சதர்ன் டிரங்க் (GST) சாலையில் பாலம்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான GST சாலை நாட்டின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். பண்டிகை காலங்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில், இரு திசைகளிலும் 3-4 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. 2018ல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 30 கி.மீ. elevated சாலை அமைக்க முன்மொழிந்தது. இருப்பினும், சாத்தியக்கூறு, போக்குவரத்து மற்றும் சீரமைப்பு சிக்கல்கள் காரணமாக, இத்திட்டம் 18.4 கி.மீ. ஆக குறைக்கப்பட்டது.
NHAI சில மாதங்களுக்கு முன் விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்தாலும், இன்னும் ஒப்பந்தப்புள்ளிகளை கோரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை, இந்த elevated corridor-ன் நுழைவு மற்றும் வெளியேறும் ramp-களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது.
கிளாம்பாக்கம் மெட்ரோ
சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் இருந்து KCBT வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க மாநில அரசு இறுதி அனுமதி அளித்தது. இந்த பரபரப்பான பகுதியில் கட்டுமானத்திற்கு வசதியாக, NHAI 2024ல் வண்டலூர் முதல் செட்டிப்புண்ணியம் வரையிலான 18.5 கி.மீ. தூரமுள்ள நான்கு வழி GST சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தியது. GST சாலையின் அகலம் 35-45 மீட்டர் வரை மாறுபடும். அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த பிரிவில் தினமும் 75,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன.
கட்டுமான நோக்கங்களுக்காக, இருபுறமும் வழித்தடம் அமைக்கப்படும். பயணிகளுக்கு சீரான போக்குவரத்துக்காக ஆறு வழிப்பாதைகள் கிடைக்கும். தாம்பரம் ரயில்வே மேம்பாலம் (RoB) மற்றும் பெருங்களத்தூர் இடையே 2.4 கி.மீ. தூரமுள்ள நான்கு வழி GST சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியையும் NHAI மேற்கொண்டுள்ளது.
சென்னை கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போது, இருமபுலியூர் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு சென்னை புறவழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இணைகின்றன. இந்த இடத்தில் சாலையின் அகலம் 35 மீட்டரில் இருந்து 11 மீட்டராக குறைகிறது. தாம்பரம்-பெருங்களத்தூர் பிரிவில் உள்ள தாம்பரம் RoB விரிவாக்கம் முடிந்துவிட்டது. சென்னை புறவழிச்சாலை/தாம்பரம் நோக்கிய அடுத்த பிரிவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்குள் அவை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதில் இருந்து, சமீப மாதங்களில் GST சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது. சாலை விரிவாக்கம் தாம்பரம் மற்றும் செட்டிப்புண்ணியம் இடையே உச்ச நேர போக்குவரத்து நெரிசலைக் குறைத்தாலும், ஒட்டுமொத்த நெரிசல் பெரிய அளவில் குறையவில்லை. இந்த elevated corridor முன்னதாகவே கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட சாலை வரும் பட்சத்தில் இங்கே பயண நேரம் 70 நிமிடத்தில் இருந்து 30 நிமிடங்களுக்கு கீழாக குறையும்.












Click it and Unblock the Notifications