சீமானுக்கு எதிரான வழக்கு! 2012ல் விஜயலட்சுமி வாபஸ் வாங்கியும் நிலுவையில் வைத்தது ஏன்? நீதிபதி கேள்வி
சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காகத்தான் நேற்று முன் தினம் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகினார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய வாழ்த்துகள் என்ற திரைப்படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். அவருடைய அக்கா பிரபல நடிகை ஜெயபிரதாவின் சகோதரரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மனிதாபிமானத்துடன் உதவி செய்தேன்.
அப்போது விஜயலட்சுமிக்கும் எனக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கம்தான் இருந்தது. இது எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதில் மறைக்க எந்த ரகசியமும் இல்லை. என் குடும்பத்தினர், எனக்கு நெருக்கமானவர்களுடனும் விஜயலட்சுமியும் அவருடைய குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த காலகட்டத்தின் போதுதான் விஜயலட்சுமி சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயலட்சுமி என்னை வற்புறுத்தினார். அவருக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதையடுத்துதான் எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கினார்.
ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டும் இதே போல் எனக்கு எதிராக புகார் கொடுத்தார். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்பதால் அந்த வழக்கு வளசரவாக்கம் போலீஸாரால் முடித்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் மீது புகார் அளிததுள்ளார். எனவே இந்த வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இதை முடித்து வைக்க வேண்டும். இவ்வாறு சீமான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனு நகல் தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனு நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, 2011ல் அளித்த புகாரை வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications