டிசம்பர் வந்ததும்.. சென்னை இல்லம் தேடி வந்த வெள்ளம்! வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகுகளில் மீட்பு!
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் செங்குன்றம் பகுதியில் பொதுமக்கள் வசித்த வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக உருமாறியது. கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த அந்த புயல் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.
தற்போது அது வங்க கடலில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து வலு குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை கனமழை
அதே நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும் கூறியிருந்தார். இன்றைய சூழலில் நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருச்சி, தேனிஉள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறி இருந்தது. மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டது.
சென்னை மழை நிலை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பாரிமுனையில் மட்டும் 26.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது சராசரியாக 13 செமீ மழை பெய்யும் நிலையில் இது இயல்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
அதுமட்டுமல்லாமல் எண்ணூரில் 26 சென்டிமீட்டர், ஐஸ் ஹவுசில் 23 செமீ பேசின்பாலம், மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் 20 சென்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 17 சென்டிமீட்டர் என அதிக கன மழை பெய்துள்ளது. இதெபோல் புறநகர் பகுதிகளான அயனாவரம், கும்மிடிப்பூண்டி, பெரம்பூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பொதுமக்கள் மீட்பு
கனமழை காரணமாக ஓட்டேரி நல்லான் கால்வாயில் அதிகப்படியாக நீர் வெளியேறியதால், கொளத்தூர், கதிர்வேடு, ரெட்டேரி ,வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது .இதே போல செங்குன்றம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். தகவலரிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வீடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்டு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications