4,620 கோடி ரூபாய் மோசடி.. இன்னும் பலர் சிக்கல.. இயக்குநருக்கு ஜாமீன் மறுத்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: 4,620 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் இயக்குநரும், நான்காவது குற்றவாளியுமான சவுந்தரராஜன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 500 நாட்களுக்கு மேல் சவுந்தரராஜன் சிறையில் இருப்பதையும், அவரது உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் டி. செல்வம் ஆஜராகி, சவுந்தரராஜனுக்கு உடல் நல பிரச்சனை என்றால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். மேலும், சவுந்தரராஜனின் மகன் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது எனக் கூறினார்.
ஹிஜாவு இயக்குநர் சவுந்தரராஜனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications