வேதா இல்லம் தொடர்பாக அதிமுக மேல்முறையீடு – தீபாவுக்கு புதிய தலைவலி
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு ரூ.67.90 கோடி ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என வாதங்களை தீபாவும், தீபக்கும் முன்வைத்தனர். மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனவும், உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வேதா இல்ல சாவி ஒப்படைப்பு
இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக் ஆகிய இருவரிடம் வழங்கினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது அத்தையான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் வசித்த போயஸ் தோட்டத்திலுள்ள வேதா இல்ல சாவி தனது அண்ணன் மற்றும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சாவியை தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையிம் எனவும் ஜெ.தீபா கூறினார்.

அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் வழக்கு
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேலுமுறையீடு செய்ய அனுமதி அளிக்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தார். இன்று காலை வழக்கு விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவு என்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டது.

மேல்முறையீடு செய்ய அனுமதி
இதனையடுத்து , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

தீபாவுக்கு தலைவலி
கடந்த சில நாட்களுக்கும் முன்னர்தான் நீண்ட கால போரட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தீபா நுழைந்தார். மேலும் ஜெயலலிதா வழக்கமாக நின்று தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் இடத்தில் நின்று தீபா தனது கணவருடன் நின்று போஸ் கொடுத்தார். இந்நிலையில் அதிமுக தொடர்ந்துள்ள வழக்கில் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு இருக்கலாம் என்ற நிலையில் மீண்டும் தீபா நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக மூலம் தீபாவுக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications