குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுவை முன்கூட்டி விசாரிக்ககோரிய பப்ஜி மதன்! ஏற்க மறுத்த ஹைகோர்ட்
சென்னை: தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டம்
ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

குண்டர் வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை
இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதன் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், 18 மாதங்களேயான தனது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டு, தனக்கு எதிரான சட்ட போராட்டங்களை நடத்திவரும் தன் மனைவி உடல் நலக்குறைவால் சிரமப்படுவதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

விரைந்து விசாரணை
மேலும், தனக்கும் சில உடல்நலக்குறைவு இருப்பதால் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு வழக்கறிஞர்
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால்தான் மதனை குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும், இதுபோன்ற காரணங்களுக்காக அவசரமாக விசாரிக்கக் கூடாது எனவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டார்.

பப்ஜி மதன் மனு தள்ளுபடி
பின்னர், உத்தரவிட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற பப்ஜி மதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications