பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு ரூ. 500 அபராதம்.. அதிரடி காட்டிய சென்னை ஐகோர்ட்.. என்னாச்சு?
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 6 ஆண்டுகள் கழித்து, உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய பள்ளிக் கல்விச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், வெண்ணிலா என்பவர் இடைநிலை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்காமல், மாவட்ட கல்வி அலுவலர் காலதாமதம் செய்தார்.

இதையடுத்து ஆசிரியை வெண்ணிலா கொடுத்த மனுவை விசாரித்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர், பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விரைவாக பரிசீலிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். ஆனால் அதன்பின்னரும் அவர் ஒப்புதல் அளிக்காததால், ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று 2016-ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் அவர் ஒப்புதல் அளிக்காததால், மாவட்டக் கல்வி அலுவலருக்கு எதிராக 3 முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும், 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள், இப்போது மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்று முறையிட்டார்.
பின்னர் நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவில், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2,148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனு தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும், பள்ளிக் கல்வித்துறைச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
அந்த அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் உயர் நீதிமன்ற சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவேண்டும். அந்த பணத்தை செலுத்தியதற்கான ரசீதை காட்டிய பின்னரே, இந்த உத்தரவு நகலை பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற பதிவுத் துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications