20 லட்சம் லஞ்சம்! தாசில்தார் மீதான புகாரை 12 வாரத்தில் திருப்பத்தூர் கலெக்டர் முடிக்கனும் - ஐகோர்ட்
சென்னை: பட்டா நிலத்தில் மூன்றாவது நபரின் தலையீடு குறித்த புகாரில் தீர்வு காண்பதற்காக 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தாருக்கு எதிரான புகாரில், 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டுமென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அருகே உள்ள ஆதனவூர் கிராமத்தில் குமரேசன். இவருக்க்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் பயிர் விளைவித்து வருகிறார். இந்நலையில் தான் சிலர் அந்த சொத்தில் அத்துமீறி நுழைந்து பயிருக்கு சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் நிலத்தை சுற்றி போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வேலயை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரச்சனைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே தான் மூன்றாவது நபரான கோவிந்தராஜ் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, குமரேசனின் தனிப் பட்டாவில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டுமென விண்ணப்பம் அளித்து, பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்து, கூட்டு பட்டாவாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குமேரசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தாசில்தார் விசாரணையின்போது, பட்டா பிரச்சினையை தீர்த்துவைப்பதாக கூறி, 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆகஸ்ட் மாதம் அளித்த புகார், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த மனு சென்னை உயரநீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் குறித்து மனுதாரருக்கும், தாசில்தாருக்கும் நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.












Click it and Unblock the Notifications