கல்லூரிக்கு எதிராக புகார் கொடுத்த மாணவியை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்ததாக கல்லூரிக்கு எதிராக புகார் அளித்த மாணவியை, தேர்வு எழுத அனுமதி மறுத்த விவகாரத்தில், செமஸ்டர் தேர்வு எழுத மாணவியை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகளில் கல்வி கட்டணமாக 53, 825 ரூபாயை தன்னிடம் வசூலித்துள்ளதாகவும், இது அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை குருநானக் கல்லூரி நிர்வாகம் கடந்த 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 2500 மாணவ மாணவிகளிடம் இருந்து 15 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கல்வி கட்டணமாக வசூலித்திருப்பதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசு நிதியுதவியின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசின் உயர் கல்வி துறை கடந்த 2007 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசானையை மீறி, சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணத்தை வசூலித்திருப்பதாகவும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கல்லூரி 3 ஆம் ஆண்டிற்கான பருவத் தேர்வை எழுத தன்னை அனுமதிக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.
கல்லூரி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் தன்னை தேர்வு எழுத அனுமதிக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மாணவி லோகேஸ்வரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜகுரு ஆஜராகி, மாணவர்களிடம் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதங்கள் வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டு தேவானந்த், நவம்பர் 6 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் கல்லூரி செமஸ்டர் தேர்வை மாணவி லோகேஸ்வரி எழுத அனுமதிக்குமாறு வேளச்சேரி குருநானக் கல்லூரிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications