விடுதலை ரத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தலைவலி.. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது எப்படி?
சென்னை: வருமானத்துக்கு மீறி சொத்துகுவித்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசை ஸ்ரீவில்விபுத்தூர் நீதிமன்றம் விடுமுறை செய்தது. இதை தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது விடுதலையை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தான் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் தங்கம் தென்னரசு. இவர் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த திமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் தங்கம் தென்னரசு இடம் பெற்றிருந்தார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
அதாவது திமுக ஆட்சி முடிவடைந்த பிறகு தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடந்தது. இந்த சமயத்தில் தான் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி மணிமேகலையை ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
ஆனால் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை உள்ளிட்டோரை விடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். தாமாக முன்வந்து அவர் அந்த வழக்கை கையில் எடுத்தார். வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு அவரின் மனைவிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை எதிர்த்து தங்கம் தென்னரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தங்கம் தென்னரசுவுக்கு சாதகமான உத்தரவு வரவில்லை. அதோடு வழக்கை மறுஆய்வு செய்து உத்தரவிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இது தங்கம் தென்னரசுவுக்கு பிரச்சனையாக மாறியது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும், அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு என்பது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை விடுவித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை மீண்டும் துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவும் பிறப்பித்தார். அதுமட்டுமின்றி விசாரணைக்கு ஆகஸ்ட் 9 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதன்பிறகு தினமும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications