சென்னை ஏர்ஷோ நிகழ்ச்சி.. எந்த முன்னேற்பாடும் இல்லை.. ஸ்டாலின் பஸ்களையும் காணோம்.. அதிமுக காட்டம்
சென்னை: சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாகவும், பல இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் கூட இல்லை என்று மக்கள் வேதனை தெரிவித்தனர். கார்களில் வந்தவர்கள் பலரும் கார்களை எடுக்க முடியாமல் நடந்தே வீடு திரும்பினர். இந்த நிலையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு முறையான எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. விமானப்படையினர் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சியை கண்டே மெய்சிலிர்த்த மக்கள் பலரும் நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டனர்.

இதனால், இன்று காலை விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். காலை காலை 11 மணிக்குத் தொடங்கிய விமான சாகச நிகழ்ச்சிகள் மதியம் 1 - 1.30 மணி வரை நடந்தது. ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் கூட்டம் வங்க கடலை மிஞ்சும் அளவுக்கு அலைமோதியது. இதனால், கடுமையன சிரமத்தை மக்கள் சந்தித்தனர். விமானப்படையின் சாகசம் முடிந்து வீடு திரும்பும் போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாகப் பல இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் கூட இல்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கார்களில் வந்தவர்கள் பலரும் கார்களை எடுக்க முடியாமல் நடந்தே வீடு திரும்பினர். இந்த நிலையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு முறையான எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய - மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர், உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.
முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். இவ்வாறு ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications